Sunday, December 17, 2006

பாடகிகளின் முக அசைவுகள் பற்றி பழந்தமிழ்க் காவியம்

ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணி என்னும் நூலில், சீவகனுடைய நாயகிகளில் ஒருத்தி காந்தருவதத்தை. இவள் காந்தர்வ வேதம் என்றழைக்கப் பட்ட சங்கீதத்தில் பெரும் தேர்ச்சி பெற்றவள். இவள் சபை நடுவில் பாடிய அழகை வர்ணிக்கும் அருமையான பாடல் இது -

கருங்கொடிப் புருவம் ஏறா
கயல்நெடுங்கண்ணும் ஆடா
அருங்கடி மிடறும் விம்மா
அணிமணி எயிறும் தோன்றா
இருங்கடற் பவளச் செவ்வாய்
திறந்திவள் பாடினாளோ
நரம்பொடு வீணை நாவில்
நவின்றதோ என்று நைந்தார்.


பொருள்:

அவள் போடும்போது கரிய கொடி போன்ற புருவம் நெற்றிக்கு ஏறாமல் அசைவற்று இருக்கிறது.
கயல்மீன் போன்ற கண்கள் வலமும் இடமும் துடிக்காமல் ஓய்ந்திருக்கின்றன.
அழகு பொருந்திய அவளது கழுத்தில் உள்ள மிடறு வீங்கி வடியவில்லை.
முத்துப் போன்ற அழகிய பற்கள் கூட வெளியே தோன்றவில்லை !
பெருங்கடலில் பிறந்த பவழம் போன்ற அந்த சிவந்த வாய் திறந்து இவள் தான் பாடினாளோ !
அல்லது வீணையே நரம்புடன் உயிர்கொண்டு நாவெடுத்துப் பாடிற்றோ
என்று சபையினர் வியந்தனர்.



கச்சேரியில் பெண் இசைக் கலைஞர்கள் கொலு வீற்றிருந்து பாடுவதே ஒரு தனி அழகு. அன்றைய கச்சேரியின் பாட்டுக்கள் தவிர, அவர்களது பட்டுப்புடவை, புதிதாக அந்த வித்வாம்சினி அணியத் தொடங்கியிருக்கும் ஜிமிக்கி, அவரது ஒப்பனை போன்ற இதர விஷயங்கள் பற்றிய விவாதங்களுக்கும் தீனி உண்டு அவர்கள் கச்சேரிகளில்.

இந்தப் பாடலைப் படித்தவுடன் புகழ்பெற்ற வித்வாம்சினிகள் சுதா ரகுநாதன், எஸ்.சௌம்யா, நித்யாஸ்ரீ, அருணா சாய்ராம் இவர்களது சில பழைய க்ளிப்ஸ் பார்த்தேன்... ஒருவராவது பழந்தமிழ்ப் பாடகி இலக்கணத்திற்கு 100% ஒத்துப் போவதாகத் தோன்றவில்லை. அது ஒரு அமானுஷ்யமான கந்தர்வ இலக்கணம் போலும்!

8 comments:

Anonymous said...

ஜடாயு

அருமையான வர்ணனை ஆனால் நிஜத்தில் சாத்தியம் இல்லை என்று தோன்றுகிறது. பாடகர்களின் அங்க சேஷ்டைகள் எண்ணற்ற கார்ட்டூன்களுக்கு இடமளித்துள்ளது. இருந்தாலும் இந்தப் பாடகர்கள் 3-4 மணி நேரம் வளையாது நிமிர்ந்து அமர்ந்து பாடுவதைப் பார்க்கும் பொழுது பிரமிப்பாக இருக்கும். அதற்கு அசாத்திய பயிற்சி வேண்டும்.

முடிந்தால் பலே பாண்டியா என்னும் படத்தில் 'நீயே எனக்கு என்றும் நிகரானவன்' என்ற அருமையான பாடலுக்கு எம் ஆர் ராதாவும் சிவாஜியும் செய்யும் அங்க சேஷ்டைகளை பார்த்து மகிழவும்.

அன்புடன்
ச.திருமலை

ஜடாயு said...

திருமலை,

ஆம்.

இது பற்றி சமீபத்தில் kanagas உ.வே.சா எழுதியதிலிருந்து ஒரு அருமையான பிரசங்கத்தை எடுத்துத் தன் படிவில் போட்டிருந்தார் -

http://srinoolakam.blogspot.com/2006/12/blog-post_15.html

மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது.

வல்லிசிம்ஹன் said...

ஜடாயு,
பாடகர்கள் பாடும்போது,அங்க
அசைவுகள் நம் கவனத்தைக் கலைக்கின்றன.

எனக்குக் கச்சேரி கேட்கத்தான்
பிடிக்கிறது.:-)
என் நெடூநாள் என்னத்தை நீங்கள் அழகாகப் பதிந்து விட்டீர்கள்.

ஜடாயு said...

நன்றி வல்லி சிம்ஹன். யார் பாடினாலும் ஓரளவு அங்க அசைவுகள் இருந்தே தீரும், அதற்கு மேல் போனால் தான் தொல்லை.

பாம்பே ஜெயஸ்ரீ பாடும்போது ஒருவிதமான தியான பாவத்தில் தான் பாடுகிறார், முக்கால்வாசி நேரம் கடைக்கண் பார்வை கிடைக்காது. அங்க அசைவுகள் மிகவும் மிதமாக அவரிடம் இருக்கிறது என்று நினைக்கிறேன்..

Muse (# 01429798200730556938) said...

ஒரு மிகப்பெரிய பாடகர் ஒரு முறை தொண்டை கட்டி அவதிப்பட்டுக்கொண்டிருந்தாராம். ஆனால், சமத்தாக கச்சேரிக்குக் கிளம்பிவிட்டார்.

எப்படி பாடப்போகிறீர்கள் என்று கேட்டதற்கு, முடிந்த அளவு பாட வேண்டியதுதான் மிச்சத்துக்கு கையை ஆட்டியே சமாளித்துவிடலாம் என்றாராம்.

வாழ்க்கைபோல இசை இரண்டு வகையாயிருக்கிறது. வெளிநோக்குவது, உள்ளேயாழ்வது. உள்ளேயாழும்போது உடல் அமைதியாகிவிடுகின்றது. வெளியே ஆழும்போது உடல் ஆடத்தொடங்குகின்றது.

மிகவும் ஆழ்ந்தால் முற்றிலும் அமைதி. அங்கே பாடலும் இல்லை, ஆடலும் இல்லை. கர்நாடக சங்கீதம் இந்த அமைதியை இசையின்மூலம் எட்டுகின்றது. பாடகரோ, பாடகியோ, வாசிப்பவரோ அமைதியாய் தொடங்கி மேலேயேறி சடாரென்று கீழே இறங்கி நடுவுக்கு வந்து மீண்டும் மேலேயோ கீழேயோ போய் வருகின்றனர். கேட்பவர்கள் இந்த இசை அலையோடு மேலும் கீழும் இடையிலும் பயணிக்கின்றனர். சில சமயங்களில் சட சடவென்று ஆலாபனை மேலேயேறி மேலேயேறி கேட்பவர்களை மேலேயேற்றி மேலேயேற்றி
திடீரென்று நின்றுவிடும். அனைவரும் அகாலதில் மிதப்பர். வித்வான் மீண்டும் இசைக்கும்போது மீண்டு, அனுபவம் கொடுத்த ஆனந்தத்தில் கைதட்டுவர்.

நான் கவனித்தவரை கர்நாடக இசை பாடல்களுக்கு கைதட்டுக்கள் இந்த இடத்தில்தான் பெரும்பாலும் கிடைக்கின்றன.

இந்த அகால நிலை இசையில் மட்டுமல்ல, பெர்ஃபெக்ஷன் (இதற்கு சரியான தமிழ் வார்த்தை என்ன?) அடையும் எல்ல நிலைகளும் இந்த அனுபவத்தை கொணரும். அதாவது இந்த பெர்ஃபெக்ஷனை உணர்வோடு அறிய வைக்கின்ற விஷயங்கள் இந்த நிலையை கொணரும். அது பரத நாட்டியமாக இருக்கட்டும், களரி பயட்டாக இருக்கட்டும், கவிதை வடித்தலாக இருக்கட்டும், சிற்பமும், ஓவியமும் உயிர்பெறும் தருணமாகட்டும் - அகால நிலையே ஆனந்தம்.

தமிழ்மண் வளர்த்த இந்த இந்திய உயர்கலைகளுக்கும், மேற்கத்திய கலாச்சார காப்பிகளுக்கும் அல்லது சோட்டாணிக்கரை பகவதியம்மன் கோயில் பேயாடிகளுக்கும் உள்ளது ஒரே ஒரு வித்தியாசம்தான். இந்திய உயர்கலைகளை அனுபவிப்பதை உணர்வோடு செய்யலாம். ஆனால் மேற்கத்திய நவீன வலிப்புக்களை அனுபவிப்பது பற்றி உணரும்போதே அந்த இசை, நடனம், உடலசைவுகள் நின்றுவிடும். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது பற்றிய உணர்வில்லாமல் இருக்கும்போதுதான் இந்த மேற்கத்திய நவீன இசையை ஏற்க முடியும்.

அமைதியான அனுபவத்தை மேற்கத்திய செவ்விசைகளிலும் ஓரளவு உணரமுடியும்.

இசையின் உச்ச அகால நிலையில் காரணம் இல்லாத, அதாவது வாத்திய கருவிகளோ, பாடுபவரோ இன்றியிருக்கும் ஆதி இசை இருக்கும். இதை ஓங்காரமாக உணரலாம் என்று ஆன்றோர் பகலுவர்.

ஒருவேளை இதைத்தான் அத்தனை மத நூல்களும், "ஆதியில் இருந்தது ஒலி" என்று கூறுகின்றனவோ?

ஜடாயு said...

ம்யூஸ்,

ஆழ்ந்த கருத்துக்கள் உங்களுடையது, வழக்கம் போல :))

// உள்ளேயாழும்போது உடல் அமைதியாகிவிடுகின்றது. வெளியே ஆழும்போது உடல் ஆடத்தொடங்குகின்றது //

இசையைப் பொறுத்தவரை இது சரி. ஆனால், பரத நாட்டியம் போன்ற நுண்-உணர்வுகளையும் வெளிப்படுத்தும் ஆழ்ந்த நடனக் கலையில், இந்த 'உள் ஆழ்தல்' தான் நடனமாக வெளியில் விகசிக்கிறது என்று சொல்லலாம் இல்லையா?

// அது பரத நாட்டியமாக இருக்கட்டும், களரி பயட்டாக இருக்கட்டும், கவிதை வடித்தலாக இருக்கட்டும், சிற்பமும், ஓவியமும் உயிர்பெறும் தருணமாகட்டும் - அகால நிலையே ஆனந்தம் //

அற்புதமான வரிகள். காலாதீதம் என்று இதைத் தான் ஆன்மீகத்தில் சொல்கிறார்களோ? A state where the time stands still.

// அமைதியான அனுபவத்தை மேற்கத்திய செவ்விசைகளிலும் ஓரளவு உணரமுடியும். //

ஆம். Bach உடைய பல இசைக் கோவைகளை (compositions) கேட்டிருக்கிறேன். மிக்க அமைதியும், ஆனந்தமும் தரும் இசை அது.

திண்டுக்கல் தனபாலன் said...

இன்று உங்களின் இந்த பதிவு சகோதரி நுண்மதி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது... லிங்க் : http://blogintamil.blogspot.in/2012/06/blog-post_1841.html !

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை ! நன்றி !

arul said...

nice post