Thursday, October 11, 2007

மனிதர்கள், சம்பவங்கள், மதங்கள் - 2

திரு. அருணகிரி அவர்களின் இந்தக் கட்டுரையின் முதல் பாகம் இங்கே.

அதன் தொடர்ச்சி...

வன்முறைக்கும் உயிர்க்கொலைக்கும் அரசு மற்றும் சமூக நிறுவனங்கள் தரும் அங்கீகாரத்தை விட மத நிறுவனங்கள் தரும் அங்கீகாரங்கள் அதிகத் தீமையைத் தர வல்லவை. அரசின் சட்டங்கள் சமூகத்தால் சமூகத்தின் சட்டங்கள் அரசால் திருத்தப்படலாம், மாற்றப்படலாம். காலப்போக்கில் தூக்கியெறியப்படலாம். உடன்கட்டை ஏறுதலுக்கும், சாதிக் கொடுமைகளுக்கும் எதிராகச் சட்டம் இயற்ற முடிந்தது. நிறப்பிரிவு (seggregation) நடைமுறைகளையும், பெண்களுக்கு ஓட்டுரிமையின்மையும் கடந்த நூற்றாண்டில் சட்டம் மூலம் மாற்ற முடிந்தது. ஆனால் மத சட்டங்கள், அதுவும் இஸ்லாம் போன்ற அரசியல் மதத்தின் சட்டங்கள் மாற்றப்படுவதையோ காலத்திற்கேற்றவாறு திருத்தப்படுவதையோ அடிப்படைவாத இஸ்லாம் அனுமதிப்பதில்லை.

ஐரோப்பாவின் விழிப்புணர்வு காலம் தொட்டு கிறித்துவம் பல கேள்விகளுக்கு உட்படுத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இது ஓரளவுக்காவது அதன் மத அதிகார வெறியைக் கட்டுக்குள் வைக்கிறது. முக்கியமாக, கிறித்துவப் பெரும்பான்மை நாடுகள் பைபிளை அரசியல் அமைப்புக்கு அடிப்படையாக்கவில்லை. அரசு நடத்தவோ சட்டம் இயற்றவோ ஏசுவின் வாழ்க்கையையோ பேச்சுகளையோ நாடுவதில்லை. அடிப்படைவாத இஸ்லாமோ இதற்கு நேர்மாறாக 7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒருவரின் அன்றைய வாழ்க்கை முறையையும் பேச்சுகளையும் என்றும் மாறா உண்மைகளாகக் கொண்டு இன்றும் அரசியல் செய்யவும் அரசு நடத்தவும் முற்படுகின்றன. அரசியலில் மட்டுமல்ல, தனிமனித வாழ்வியலிலும் அவற்றைக் கொண்டு வருகின்றன. விளைவு, குண்டு வெடித்தல்களையும், படுகொலைகளையும், இஸ்லாத்திற்காக செய்கிறோம் என்று கொலைகாரர்களால் எளிதாகச் சொல்லி மத அங்கீகாரம் பெற்று விட முடிகிறது. இவற்றை ஓரளவு விமர்சிக்கும் தஸ்லிமா நஸ்ரின், ரசூல் போன்ற ஒரு சிலர்களை மதவிரோதிகளாகக் காட்டி விட முடிகிறது.



தனிமனித சுதந்திர மறுப்பை நிறுவனப்படுத்திய ஸ்டான்ஃபோர்டு பரிசோதனை சாதாரண மனிதர்களை குரூரர்களாக்கியது. பலரை சிந்தனை இழந்த யந்திர வேதாளங்களாக (zombies) ஆக்கியது. சிலரை மிகுந்த மன அழுத்தத்திற்கு உட்படுத்தி சிறையிலிருந்து வெளியேற வைத்தது. இஸ்லாமிய அடிப்படைவாதம் என்ற மத அதிகார நிறுவனமும் இப்பரிசோதனையின் பல கூறுகளைப் பிரதிபலிக்கின்றது: தன் பிடிக்குள் வருபவர்களை, சக மனிதர்களைக் கொன்றுபோடத் தயங்காத மூர்க்கர்களாக நிலை மாற்றுகின்றது. சிலரை சுய சிந்தனை இழந்து கேள்விகளற்றுப் பணியும் யந்திரங்களாக்குகிறது.

ஆனாலும் ஒரு விஷயத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதம் ஸ்டான்ஃபோர்டு சோதனையிலிருந்து வேறுபடுகின்றதுதான். அதாவது, ஸ்டான்ஃபோர்டு பரிசோதனையைப் போலன்றி, இந்த அடிப்படைவாத நிறுவனத்தை எதிர்ப்பவர்களுக்கு அதனை உதறி வெளியேறும் வாய்ப்பினை அது வழங்குவதில்லை. மாறாக அப்படிப்பட்ட எதிர்ப்பாளர்கள் கடவுளை அவமதித்தவர்களாகக் கருத்தப்பட்டு தண்டிக்கப்படுகிறார்கள் (மரண தண்டனை உள்பட). ஒரு மாஃபியாத் தன்மையுடன் நிறுவப்படும் இப்படிப்பட்ட தீவிரவாத மத நிறுவனங்களுக்கு உள்ளே மாட்டிக்கொள்பவர்களின் மன உளைச்சலும் அழுத்தங்களும் எங்காவது வெடிக்கத்தானே வேண்டும். அதற்கும் வழி செய்து தருகிறது இந்த நிறுவனம். இவர்களது ஊமைக்கோபத்தையும் உள்ளுறை இயலாமையையும் அடிப்படைவாத நிறுவனத்தின்மேலேயே காட்டி விடாமல் இருக்கும் பொருட்டு, எதிரிகள் கண்டுபிடிக்கப்படுகிறார்கள்- இந்துக்களாகவோ, கிறித்துவர்களாகவோ, யூதர்களாகவோ, கம்யூனிஸ்டுகளாகவோ, ஓரினச்சேர்க்கையாளர்களாகவோ, பெண்விடுதலை பேசுபவர்களாகவோ, இஸ்லாத்தை விமர்சிக்கும் இஸ்லாமியர்களாகவோ- இப்படி எவ்விதத்திலாவது எல்லா நேரத்திலும் வசதியாக இவர்களுக்கு எதிரிகள் காட்டித்தரப்படுகிறார்கள். இந்த 'எதிரிகளைக்' கொன்று அழிப்பவர்கள் இறைவனுக்கு உகந்தவர்களாக அடையாளப்படுத்தப்பட்டு, ஜிஹாதி வன்முறையாளர்களாய் நிலை மாற்றப்படுகிறார்கள். உருவாக்கப்பட்ட துப்பாக்கி அதற்கு ஏற்ற கரத்தைக் கட்டாயம் கண்டு பிடித்து விடுவது போல, உற்பத்தி செய்யப்பட்ட வன்முறை ஜிஹாதிகளும் ஏதாவது ஒரு எதிரியைக் கண்டு பிடித்து விடுகிறார்கள்தான். அப்படிக் கண்டுபிடிப்பதில்தான் அவர்களது இருப்பு அவர்களுக்கே அர்த்தம் உடையதாக ஆகின்றது. அடிப்படைவாத இஸ்லாம் என்பது ஜிஹாதி உற்பத்திக்கூடமாவது இவ்வாறுதான். இதனால்தான், முழுவதும் இஸ்லாமிய நாடுகளாக இருக்கும் நாடுகளிலேயே கூட ஒரு பிரிவு மற்றொரு பிரிவை மதக்கடமையாக, ஜிஹாதிப்போரில் அழித்துக்கொல்வதை அதன் தொடக்க காலம் முதலே காண முடிகிறது.

கொலையும், கொள்ளையும், பாலியல் கொடுமைகளும், பெண்ணடிமைத்தனமும், படிப்பறிவின்மையும், மதவெறியும், சுவனக்கனவுகளும் இஸ்லாத்தின் பெயரால் புகட்டப்பட்டு இஸ்லாத்தின் தலைவர்களாலேயே அதன் இளைய சமுதாயத்திற்கு ஒரு மாபெரும் அநீதியும் வாய்ப்பு மறுத்தலும் நிகழ்த்தப்பட்டு வருகிறது. "முஸ்லீம்கள் ஒரு விரும்பத்தகாத கூட்டம்" என்ற கருத்து பல நாடுகளிலும் பரவி வருகிறது. என்னுடைய மிக நல்ல முஸ்லீம் நண்பர்களை நினைத்து, என் வீட்டிற்கு விளையாட வரும் முஸ்லீம் குழந்தைகளைக் கண்டு மனம் பதைத்து இதைச் சொல்கிறேன். இஸ்லாமிய அடிப்படைவாதம் ஒரு விபரீதக் கோட்பாடாக ஆகிவருகிறது என்பதை இஸ்லாத்தில் உள்ள முற்போக்காளர்கள் உடனடியாக வெளிச்சம் போட வேண்டும். உள்ளிருந்து அவ்வாறு வெளிச்சம் போட முனைவது எத்தகைய ஆபத்தான விஷயம் என்பது சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ்ரின், சமீபத்தில் ஹெச். ஜி. ரசூல் ஆகியோர் மேல் விதிக்கப்பட்ட ஃபாத்வாக்களைப் பார்க்கையில் தெளிவாகின்றது.



தன் தந்தை ஷாஜஹானுக்கு வளர்ப்புப் பறவை ஒன்றைப் பரிசளிக்கும் இளவரசர் தாரோ ஷுகோ


"உலகம் முல்லாக்களின் சத்தங்களிலிருந்து விடுதலை பெறட்டும்; எவரும் அவர்களது ஃபட்வாக்களுக்கு செவி மடுக்க வேண்டாம்" என்று எழுதிய தாரா ஷிக்கோவின் எழுத்துக்கள் ஒரு ஆரோக்கியமான புதுப்பித்தலை நோக்கி இஸ்லாத்தை திசை மாற்றி நகர்த்திச்செல்ல வேண்டும். இப்படிப்பட்ட திசைமாற்றத்தை அடிப்படைவாத இஸ்லாம் அனுமதிக்காத இன்றைய நிலையில், இஸ்லாத்துக்கு வெளியே உள்ள சிந்தனையாளர்கள் அதனை எதிர்த்துக் குரல் எழுப்ப வேண்டும். சிறுபான்மையைத் திருப்திப்படுத்தவும் , 'பிற மத சக்திகளுக்கு ஆதரவாகப் பேசுவதாக ஆகிவிடக்கூடாது' என்ற போலித்தனமான நியாய உணர்விலும், ஓட்டுப்பொறுக்கும் முனைப்பிலும் இந்த விஷயத்தில் பலர் கண்ணிருந்தும் குருடர்களாய், காதிருந்தும் செவிடர்களாய் வாயிருந்தும் ஊமைகளாய் இருந்து வருகின்றனர். இதனை அனைத்து தரப்பும் பேசத்தொடங்குவதுதான் இஸ்லாத்தின் அடிப்படைவாதத்தையும் அதன் சமூக பயங்கரவாதத்தையும் முனை மழுங்க வைப்பதன் முதற்படியாய் இருக்க முடியும். ஏனெனில் தனது மத அடிப்படைவாதத்தையும் ஜிஹாதி வன்முறையையும் விட்டொழிக்காத ஒரு மதக் கருதுகோள், உலகத்தில் பெரும்பாலான நாடுகளுடன் பிணக்கத்தில் ஈடுபட்டிருப்பது, அந்த மதத்தின் ஆரோக்கியமான இருப்புக்கோ, எதிர்கால தலைமுறைக்கோ நன்மை தருவதாக அமையாது.

ஸ்டான்ஃபோர்டு சிறைப்பரிசோதனையை மத நிறுவனம் கொண்டு சமுதாய நடைமுறையாக்க இஸ்லாமியத் தீவிரவாதிகளும் அடிப்படைவாத முல்லாக்களும் முயல்வது தடுக்கப்பட வேண்டும்- எல்லோருடைய நன்மைக்காகவும்- முக்கியமாக, இஸ்லாமியர்களின் நன்மைக்காகவும்.

No comments: